விரிவானம்

வாங்க, வானத்துக்கு கீழே உள்ள எதப்பத்தினாலும் பேசலாம்

இனியெல்லாம் இன்பமே

இனிய தோழிக்கு,
மகளிர் தின வாழ்த்துகள்!.

உனக்கு கடிதம் எழுத நினைக்கும் போதே உற்சாகம் வந்து மனதில் ஒட்டிக் கொள்கிறது. எனென்றால் மற்ற எல்லா உறவுகளையும் விட தோழமை சிறந்தது. அது உன்னதங்களால் உருவான உறவு. அந்தத் தோழமை உரிமையுடன் உன்னுடன் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆண்கள் செய்கின்ற எந்தப் பணியையும் பெண்களால் செய்ய முடியும் என்ற காலம் போய் ஆண்களால் செய்ய முடியாததைக் கூடப் பெண்களாலும் செய்ய முடியும் என்னும் அளவிற்கு பெண்கள் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
ஆனாலும் பழைய அடிமைச் சங்கிலியை நீ முழுமையாய் அறுத்தெரிவதற்குள் அறிவியல் வளர்ச்சியின் துணையோடு புதிய நவீன சங்கிலிகளால் பளபளப்பாய், கவர்ச்சியாய் நீ பூட்டப்பட்டுக் கொண்டிருப்பது புரியவில்லையா?
எதற்கெடுத்தாலும் ஏன் அழுது தொலைக்கிறாய்?. உனக்கு அழச் சொல்லிக் கொடுத்தது யார்? துன்பமும், துயரமும் வரும்போது அதை தூக்கி எறிய நீ செய்யத்தக்கது ஏதுமில்லையா? அல்லது புரியவில்லையா? காரணகாரியங்களை ஆராய்ந்து அதைக் களைவதுதான் விவேகம் என்பதை உணர். அதை விடுத்துக் கண்ணீர் விடுவது உன் பெண்மைக்கே இழுக்கல்லவா? யாரிடம் சோகமில்லை? யாருக்கு துக்கமில்லை? தொலைக்காட்சித் தொடரில் வரும் பாத்திரத்திற்காக அனுதாபப்படும் நீ உன் பக்கத்து வீட்டில் பட்டினி கிடப்பவனுக்கு முடிந்தால் ஒரு சொம்பு தண்ணீர் கொடு.
காதல் செய்! காதல் உனக்குள் தோழமையாய் வளரட்டும். காதலனின் கொஞ்சு மொழியில் மயங்கி கனவுகளில் நீ மிதந்து கொண்டிருந்தால் உன் கடமைகளைச் செய்யும் காலம் எது?
எதற்கெடுத்தாலும் விதி என்று வீழ்ந்து கிடந்தால் உன் மதி எதற்கு? மதி கொண்டு புது விதி எழுதிட இன்றே புறப்படு.
உன் பெருமையை நீ உணராததால்.........உணர்த்தாததால்தான் கருவறை கூட கல்லறையாய் ஆன அவலம் இன்னமும் தொடர்கிறது. இந்த துயர் போக்க எப்போது தூக்கம் கலைப்பாய்?
முப்பத்து மூன்று விழுக்காட்டிற்கே நீ முட்டிக் கொண்டிருந்தது போதும். மொத்த விழுக்காடும் நீயே எடுத்துக் கொண்டால் என்ன.
மரபுகளும், சட்டங்களும் மனித குல நன்மைக்குத்தானே. உன் நியாய உரிமைகள் மறுக்கப்படும் போது அதை நீ மறுத்து ஒதுக்கு.
தாலி, கற்பு, அச்சம், மடம், நாணம் என உன்னை தலை தூக்க விடமாட்டார்கள். நீ தன்மை இழக்காமல், உன் தனித்துவம் மாறாமல் தகர்த்து எறி.
சமையலறைக்கும், படுக்கையறைக்கும் ஓடி ஓடி ரன் எடுத்தது போதும். உன் ஓட்டத்தையெல்லாம் ஒன்று திரட்டினால் இந்த பூமியின் ஓட்டம்கூட புதிதாய் மாறும்.
ஆண்கள் பூட்டிய விலங்கைவிட நீயே உனக்கு பூட்டிக் கொண்ட பொன் விலங்குகள் அதிகம். அதெல்லாம் பொடிப்பொடியாவது எப்போது?
உனக்கு இன்பம் நல்குவதாய் வேடமிட்டு வரும் இன்னல்களை அடையாளம் கண்டு கொள். அதன் முகத்திரை கிழித்து முடுக்கு.
பிரபஞ்சத்தின் மூலாதாரமாய் நீயிருக்கையில் உன்னைச் சுற்றி வட்டமெதற்கு. நீ வட்டத்தை விட்டு வெளியே வந்தால், சூரியக் குடும்பத்துக் கோள்கள் கூட தன் சுற்று வட்டத்தை மாற்றிப் போகும். கல்பனா சாவ்லாக்கள் கிரகங்கள் தாண்டி சரித்திரம் படைக்கையில், நீ நவக்கிரகங்களைச் சுற்றிக் கொண்டு நசிந்து போகிறாயே.
வர்க்கப் புரட்சிக்கு வித்தாய் இருக்க வேண்டிய நீ, வெற்று தர்க்கம் செய்து கொண்டு காலத்தை வீணாக்குகிறாயே.
தந்தை, காதலன், கணவன், மகன் என்று எத்தனை காலம்தான் இவர்களுக்கு சேவகம் புரிவாய். நீ விசுவரூபம் எடுத்தால் விடியல்கள் கூட உன் விழியசைவுக்கு காத்துக்கிடக்கும்.
உன் பெருமைகளும், திறமைகளும் உனக்கு தெரியவில்லை. சின்னச் சின்ன நிகழ்வுகளில் நிலை குலைந்து விடாதே.
உன்னைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் குள்ள நரிகளும், தந்திர ஓநாய்களும், தக்க சமயத்திற்காக காத்துக் கிடக்கின்றன. கவனமாய் நீ இல்லையென்றால் உன் கதை முடித்து இரையாக்கிவிடும்.
மாமியாரும் மருமகளுமாய் போட்டியிட்டுக் கொண்டிருந்தால், மற்ற போட்டிகளில் பங்கேற்பது எப்போது?
நீ போராளி, சமாதானமிக்க போராளி என்பதை எதிரிக்குப் புரியவை. இயன்றவரை சமாதானம். இல்லையென்றால் போர்.
எதுவுமிங்கே நிரந்தரமில்லை. உறவுகளும் அப்படியே. சின்னச் சின்ன சென்டிமென்டுகளில் உன் சிந்தனையை அடகு வைத்து விடாதே.
கலையிலும் இலக்கியத்திலும் உன் பங்களிப்பு கனிசமாகட்டும்.
வெற்றுக் கூச்சல்களைப் புறந்தள்ளிவிட்டு மகோன்னதமான பாடல்களை பாட வா. அந்தப் பாடல்கள் எதிர் வரும் உன் சந்ததியினருக்கு தாலாட்டாகவும், தேசிய கீதமாகவும் இருக்கட்டும்.
அடக்குமுறை கண்டு அஞ்சாமையும், போர்க்குணமும் உனக்குள் பூக்க வேண்டும்.
உன் குடும்பம் மட்டுமே உலகமில்லை. உலகமே உன் குடும்பம் என்ற விரிந்த பார்வை வேண்டும்.
நகையிலும், பூவிலும் உன் நாட்டம் இருக்கும் வரை, உனக்கெதிரான புதை குழியிலிருந்து நீ மீள முடியாது.
நீ எழுச்சி கொண்டால் இமயம்கூட உனக்குத் தலை வணங்கும். ஆனால் திருமணத்தின் போது தாலி வாங்கக் குனிந்த உன் தலை நிமிரவேயில்லை. நிமிர்ந்து பார் தோழி.
உன் கருவறையில் அக்கினிக் குஞ்சுகளை அடைகாத்து வை. அந்த அக்கினிக் குஞ்சுகளால் பொய்மையும், தீமையும் பொசுங் வேண்டும்.
பெண்ணே நீ தனி நபர் அல்ல. நீ சக்தி. நீ ஒரு உலகம். உனக்கென்று பொறுப்பும் கடமையும் உண்டு.
உன் வெற்றிக்காக மட்டுமே போர்க்களங்கள் காத்துக் கிடக்கின்றன.
உனக்காக விடியல்கள் திசையெங்கும் திறந்து கிடக்கின்றன.
உனக்காக எல்லாம் காத்திருக்கும்போது ஒதுங்கிப் போய் விடாதே.
ஏனென்றால் உன்னால் பெண்ணினமே நினைவு கொள்ளப்பட வேண்டும். அதுதான் என் விருப்பம். செய்வாயா?

2 கருத்துகள்:

மதிப்பிற்குறிய ஐயா, வணக்கம். நான் தமிழ்க் காதலன். உம்முடைய முகவுரைக்கு ஏற்ப சமூக சிந்தனையுடன் பொறுப்பாக கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். இன்னும் இதுபோன்ற மனிதநேயம் மிக்க மனிதர்கள் இருப்பது கண்டு மட்டட்ற மகிழ்ச்சி. உம்மை போன்ற தமிழ் சமூகத்தின்மேல் அக்கரைக் கொண்டோரின் கவனம் நம்மை நல்ல நிலமைக்கு கொண்டு வரும். உம்மை எமது பிளாக்கிற்கு அன்புடன் அழைக்கிறேன். ( ithayasaaral.blogspot.com) என்றும் அன்புடன் தமிழ்க் காதலன்.
# படித்ததில் பிடித்தது....
# அறிவியல் வளர்ச்சியின் துணையோடு புதிய நவீன சங்கிலிகளால் பளபளப்பாய், கவர்ச்சியாய் நீ பூட்டப்பட்டுக் கொண்டிருப்பது புரியவில்லையா?
# தொலைக்காட்சித் தொடரில் வரும் பாத்திரத்திற்காக அனுதாபப்படும் நீ உன் பக்கத்து வீட்டில் பட்டினி கிடப்பவனுக்கு முடிந்தால் ஒரு சொம்பு தண்ணீர் கொடு.
# முப்பத்து மூன்று விழுக்காட்டிற்கே நீ முட்டிக் கொண்டிருந்தது போதும். மொத்த விழுக்காடும் நீயே எடுத்துக் கொண்டால் என்ன.
# கல்பனா சாவ்லாக்கள் கிரகங்கள் தாண்டி சரித்திரம் படைக்கையில், நீ நவக்கிரகங்களைச் சுற்றிக் கொண்டு நசிந்து போகிறாயே.
# வர்க்கப் புரட்சிக்கு வித்தாய் இருக்க வேண்டிய நீ, வெற்று தர்க்கம் செய்து கொண்டு காலத்தை வீணாக்குகிறாயே.
# தந்தை, காதலன், கணவன், மகன் என்று எத்தனை காலம்தான் இவர்களுக்கு சேவகம் புரிவாய். நீ விசுவரூபம் எடுத்தால் விடியல்கள் கூட உன் விழியசைவுக்கு காத்துக்கிடக்கும்.

 

பெண்களை பெருமைப் படுத்தியதிற்கு நன்றி